1810ம் ஆண்டு போர்த்துக்கல் நாட்டில் இருந்த ஜிப்ரால்டர் என்ற இடத்தில் இருந்த இங்கிலாந்து தேசத்து ராணுவத்தில் உதவிப் படைத்துறை உணவு அரங்க மா முதல்வராக திரு. ராக்லாண்ட் பணியாற்றினார். இவருடைய மனைவி பெயர் திருமதி.பிர்ச் ராக்லாண்ட். 1814ம் ஆண்டு திரு.ராக்லாண்ட் மரித்துப் போனார். அது நடந்த ஆறு மாதங்களுக்குப் பின் 1815ம் ஆண்டு ஏப்ரல் 16ம் தேதி (இன்றும் சிவகாசி நகரில் கர்த்தருக்குள் இளைப்பாறிக் கொண்டிருக்கும்) தாமஸ் கெஜட்டன் ராக்லாண்ட் என்ற தூயவர் பிறந்தார். இவர் பிறந்த சில மாதங்களுக்குள் இவருடைய அன்புத் தாயாரும் மரித்து விட்டார். இவருடைய இளமைக் காலமே துயரத்தில் ஆரம்பமானது. தாயையும் தகப்பனையும் இழந்து தவித்த ராக்லாண்ட் லிவர்பூலில் இருந்த அவருடைய மாமா திரு.சார்லஸ் பிர்ச்சின் அரவணைப்பில் வளர்ந்தார்.
ராக்லாண்டின் இளமைக்கல்வி:
ராக்லாண்டின் இளமைக்கல்வி கர்ட்மெல் என்ற இடத்தில் பள்ளியில் ஆரம்பமானது. இப்பள்ளியின் தலைமை ஆசிரியரான திரு.டெய்லரும் அவருடைய குடும்பத்தாரும் ராக்லாண்டை மிகவும் அன்பாய், கவனமாய்க் கவனித்தார்கள். இளமைப் பிராயத்திலே கீழ்ப்படிதல் உள்ளவராய், சுறு சுறுப்பானவராய் வளர்ந்தார். தன்னுடைய 15ம் வயதில் தன்னுடைய இளமைக் கல்வியை முடித்து லிவர்பூலில் உள்ள தன்னுடைய மாமாவுடன் சேர்ந்து வாணிபக் கம்பெனியில் பணியாற்றினார்.
கேம்பிரிட்ஜ் நகரில் ராக்லாண்டின் வாழ்க்கை:
1837ம் ஆண்டு அக்டோபர் மாதம் கேம்பிரிட்ஜ் நகரில் உள்ள கார்ப்ஸ் கிரிஸ்டி கல்லூரியில் இளங்கலைப் படிப்பில் சேர்ந்தார். (மத்தேயு 6:33) என்ற வேத வசனத்தை மையமாக வைத்துத் தன்னுடைய கல்லூரிப் படிப்பை ஆரம்பித்தார். இதனுடைய விளைவு, ஒவ்வொரு வருடமும் கல்லூரியில் நடைபெறும் தேர்வில் முதல் மாணவனாகத் திகழ்ந்தார். கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழகத்தின் சிறப்புத் தேர்வில் முதல் பரிசு பெற்றார். 1841ம் ஆண்டு டிசம்பரில் உதவி ஆயராக அருட்பொழிவு பெற்று பார்ன்வெல் என்ற சிற்றூரில் பணியாற்றினார்.
மிஷனெரிப் பணி ஊழிய வாழ்க்கைக்கென அர்ப்பணிப்பு:
ராக்லாண்ட் கல்லூரிப் படிப்பை முடித்தவுடன் நான்கு வருடங்களாகத் திருச்சபை ஆயர்களோடும் திருச்சபை மக்களோடும் நெருக்கமான தொடர்பை ஏற்படுத்திக் கொண்டார். இதனால் திருச்சபை ஊழியத்தில் அதிக ஈடுபாடு கொண்டார். கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகக் கல்லூரிகளில் பல ஜெபக் குழுக்களை ராக்லாண்ட் ஏற்படுத்தினார். ஹென்றி வென் 1845ம் ஆண்டு மே மாதம் ராக்லாண்ட் அறையில் கூடும் ஜெபக் கூட்டத்தில் பங்கு கொண்டார். சிறப்புப் பேச்சாளராக ஹென்றி வென் கலந்து கொண்டார். ராக்லாண்ட், ஆல்நட் ஆகிய இருவரும் தங்கள் கைகளில் மிஷனரி ஊழிய அழைப்பைப் பெற்றனர். இவர்கள் ஏந்தி நின்ற காணிக்கைத் தட்டில் தங்களையே காணிக்கையாக வைத்து மிஷனரி ஊழியத்திற்கெனச் செல்ல அர்ப்பணித்தார்கள். 1846ம் ஆண்டு ஜனவரி மாதம் ராக்லாண்ட் சென்னை வந்தார். சென்னையில் திருச்சபை மிஷனரி சங்கத்தின் தொடர்புக் குழுவின் செயலராகப் பொறுப்பேற்றுக் கொண்டார்.
மிஷனரி ஊழியத்தைப் பற்றி ராக்லாண்டின் கருத்து:
ராக்லாண்ட் தன்னைப் பற்றி இவ்வாறு எண்ணிக் கொண்டார். “நான் எனக்குச் சொந்தமல்ல, கிறிஸ்துவுக்கே அடிமை என்றும் அவர் சிந்திய இரத்தத்தினாலே நான் கிரயத்திற்கு கொள்ளப்பட்டேன்.
முடிவுரை:
“கோதுமை மணியானது நிலத்தில் விழுந்து சாகாவிட்டால் தனித்திருக்கும், செத்ததேயாகில் மிகுந்த பலனைக் கொடுக்கும்” என்ற வசனத்தின் அடிப்படையில் இயேசு கிறிஸ்துவைப் போல ஒவ்வொரு நாளும் வடதிருநெல்வேலி மக்களோடு ஒன்றித்து, மக்களுக்காய் வாழ்ந்து சாகவும் ஆயத்தமாயிருக்க வேண்டும் எனத் தன்னுடைய கல்லூரி நண்பர்களை அழைத்தார். வடதிருநெல்வேலியில் கோதுமை மணிகளாய்ச் செத்தவர்களின் பட்டியலில் மூன்றாவது இடத்தைப் பெற்றார். ராக்லாண்ட் தன்னுடைய 43வது வயதில் இறந்தார். அக்டோபர் 23 ஆம் தேதி காலை 8 மணிக்கு ராக்லாண்டின் சரீரம் மரித்தோர் உயிர்த்தெழுதலின் நம்பிக்கையோடு அவர் வசித்த பங்களாவின் பின்புறம் நல்லடக்கம் செய்யப்பட்டது. இந்த அடக்க ஆராதனைக்கு வடதிருநெல்வேலி கிறிஸ்தவர்களும், வெகுதிரளான பிற சமய மக்களும் வந்திருந்தார்கள். ராக்லாண்ட் மரித்து விட்டதைக் காணக் கூடாமல் சூரியன் தன்னை மறைத்துக் கொண்டதால், பூமி அந்தகாரப்பட்டது. வானம் தன் கண்ணீரை மழை நீராய்ப் பொழிந்தது. தாமஸ் கெஜட்டன் ராக்லாண்ட் என்ற கோதுமை மணி இயேசு கிறிஸ்துவுக்காய் வடதிருநெல்வேலி மண்ணில் விழுந்து, மண்ணோடு மண்ணாய் (மக்களோடு மக்களாய்) ஒன்றித்துச் செத்துவிட்டது.

